Offline
Menu
கார்டெல் மோசடி: அரசு நிறுவன இயக்குனர் உட்பட 13 பேரை அள்ளியது MACC!
By Administrator
Published on 06/18/2026 09:00
News

RM2.5 மில்லியன் லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு

மலேசியாவின் வடபகுதியில் உள்ள ஓர் அரசு நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் மற்றும் முன்னாள் இயக்குனர் உட்பட மொத்தம் 13 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அதிரடியாகக் கைது செய்துள்ளது.

நேரடி பேச்சுவார்த்தை மற்றும் விலைமனு (Quotation) திட்டங்களை ஒரு சில கார்டெல் (Cartel) நிறுவனங்களுக்கு சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக, சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (ஜூன் 15) இரவு 8 மணி முதல் 11 மணிக்குள், பேராக்கில் உள்ள MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக MACC-இன் மேல்மட்டத் தகவல் பிரிவு இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் 10 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர். 30 முதல் 60 வயதுக்குட்பட்ட இவர்களில் 8 பேர் அரசு ஊழியர்கள் (Civil Servants) ஆவர். மீதமுள்ள 5 பேர் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு (2026) வரை கூட்டுச் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள், தங்களுக்குத் திட்டங்கள் கிடைப்பதற்காக இடைத்தரகர்கள் மூலமாக 10% முதல் 15% வரை லஞ்சப்பணத்தைக் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தத் தொகை நேரடியாக சம்பந்தப்பட்ட அரசு இலாகாவின் இயக்குனர் மற்றும் முன்னாள் இயக்குனருக்குச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அன்று MACC-இன் புலனாய்வுப் பிரிவு கோலாலம்பூர், சிலாங்கூர், பகாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் ‘ஒப்ஸ் டிரெய்ன்’ (Ops Drain) என்ற பெயரில் மாபெரும் அதிரடிச் சோதனையை நடத்தியது.

இந்தச் சோதனையின் போது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 25 இடங்கள் சல்லடை போட்டுத் தேடப்பட்டன. இதில் ரொக்கப் பணம்: RM1.5 மில்லியன், ஆடம்பரக் கடிகாரம், 2 வாகனங்கள், அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் நகைகள் (RM1 மில்லியன் மதிப்பு) ஆகிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன:

கைது செய்யப்பட்டவர்களில் இரு அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு நிறுவன இயக்குனர் உட்பட 3 பேர், இன்று (புதன்கிழமை) வரை 2 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள 10 சந்தேக நபர்களையும் வரும் சனிக்கிழமை (ஜூன் 20) வரை 5 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்க ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்ற மஜிஸ்திரேட் அனிஸ் ஹனினி அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக, MACC சட்டம் 2009-இன் கீழ் பிரிவு 17(a)-இன் படி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments