கோலாலம்பூர்:
அம்பங்கிலுள்ள ஜாலான் பாண்டான் ப்ரிமா, டத்தாரான் பாண்டான் ப்ரிமாவில் அமைந்துள்ள லோட்டஸ் (Lotus) வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில், ஒரு டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) உட்பட மூன்று ஆடம்பர வாகனங்கள் தீயில் விபத்துக்குள்ளாகி முற்றிலும் சேதமடைந்தன.
நேற்று இரவு 8:27 மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாண்டான் இண்டா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனமும், அம்பாங் தீயணைப்பு நிலையத்தின் உதவியுடன் மற்றுமொரு வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் 7 நிமிடங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
“அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது சோதனையில் தெரியவந்தது. இதில் டொயோட்டா வெல்ஃபயர் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் ஒரு பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் ஹோண்டா (Honda) கார் ஆகியவை தலா 80 விழுக்காடு வரை சேதமடைந்துள்ளன,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் அல்லது உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இத்தீயை அணைக்கும் பணியில் 14 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு, இரவு 8:43 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.