ஜோகூர் பாரு:
எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலுக்காக (PRN Johor) ஜனநாயக செயல் கட்சி (DAP) தனது முதல் கட்டமாக நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில், ஜசெக (DAP) பொதுச்செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிகழ்வில் ஜோகூர் மாநில DAP தலைவர் தியோ நி சிங் மற்றும் அவரது துணைத் தலைவர் வோங் ஷூ கீ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்வரும் தொகுதிகளுக்கான வேட்ப்பாளர்களாக,
திராம் (Tiram) தொகுதி: நோர் சுலைலா அப்துல் கனி (வயது 38) – இவர் துணை நிதி அமைச்சரின் தனிச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஜோகூர் ஜெயா (Johor Jaya) தொகுதி: லீ வெர்ன் யிங் (வயது 30) – ஜொகூர் மாநில DAP இளையர் பிரிவு (DAPSY) தலைவர்.
புக்கிட் பெர்மாய் (Bukit Permai) தொகுதி: முகமட் ஷாஃப்வான் அனி (வயது 33) – குலாய் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி.
செனாய் (Senai) தொகுதி: வோங் போர் யாங் (வயது 40) – தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் (Incumbent), மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்குகிறார்.
போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் மேலும் கூறுகையில், மலாய் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் கலப்புத் தொகுதியான ‘திராம்’ சட்டமன்றத் தொகுதியில் DAP வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார். அங்குள்ள வாக்காளர்கள் தங்களின் புதிய வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்றுவதே பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியின் முக்கிய உத்தி என்றும் அவர் விளக்கினார்.
“செனாய் மற்றும் புக்கிட் பாத்து (பிகேஆர் போட்டியிடும் தொகுதி) ஆகியவை ஏற்கனவே எங்களின் வசம் உள்ள தொகுதிகள். இம்முறை புக்கிட் பெர்மாய் தொகுதியில் DAP களம் காண்கிறது. அங்கு கடந்த 9 ஆண்டுகளாக மக்களுடன் களத்தில் நின்று பணியாற்றிய அனுபவம் மிக்க முகமட் ஷாஃப்வானை நாங்கள் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்,” என்று லோக் மேலும் கூறினார்.