வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பி40 இந்திய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா தனது ‘பெராந்தி மகாசிஸ்வா’ திட்டத்தின் கீழ் ஜோகூர் மாநிலத்தில் நேற்று 258 புத்தம் புதிய அதிநவீன மடிக்கணினிகளை வழங்கியது. ஜோகூர், ஸ்கூடாயில் உள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (யு.டி.எம்) நடைபெற்ற இந்த நிகழ்வில், அப்பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட துன் உசேன் ஒன் மலேசியா பல்கலைக்கழகம், கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (யுனி கே.எல்), சிட்டி பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர். டிஜிட்டல் வசதிகள் இன்றித் தவிக்கும் மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடரவும், தொழில்நுட்ப உலகில் திறம்படப் போட்டியிடவும் இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையே மித்ராவின் புதிய அடையாளம்:
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மித்ராவின் தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் வழிகாட்டலில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். “ஜோகூர் மாநிலத்திலான இந்த விநியோகம் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது. பிற மாநிலங்களிலும் இத்திட்டம் மிக வெளிப்படையான, சீரான முறையில் தொடரும். தகுதியான மாணவர்களுக்கு அரசின் உதவிகள் முறையாகச் சென்றடைவதை மித்ரா உறுதி செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.
பெரந்தி மகாசிஸ்வா திட்டத்தின் கீழ் 3,000 மடிக்கணினிகள்:
மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மேற்பார்வையில் மித்ரா முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நாடு தழுவிய அளவில் தகுதியுடைய 3,000 இந்திய உயர்கல்வி மாணவர்கள் பயனடைவர். மித்ரா, மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு, நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பயனாளிகளின் பட்டியல், நிதி ஒதுக்கீடு, திட்டங்களின் நிலை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடும் நடவடிக்கை, மித்ராவின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.