கோலாலம்பூர்:
16-ஆவது ஜோகூர் மாநில தேர்தலுக்கான அரசியல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியின் 56 வேட்பாளர்கள் அடங்கிய முழுமையான அதிகாரப்பூர்வ பட்டியலை அக்கூட்டணியின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இரவு வெளியிடுகிறார்.
புக்கிட் காம்பிர் எக்ஸ்ட்ரீம் பார்க் (Bukit Gambir Extreme Park) மைதானத்தில் இன்று இரவு 8:00 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கூட்டணியின் முக்கியத் தலைவர்களான டிஏபி (DAP) பொதுச்செயலாளர் அந்தோனி லோக், அமானா (Amanah) தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு உள்ளிட்ட உச்சகட்ட தலைவர்கள், தேர்தல் இயந்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
கூட்டணியில் இதுவரை டிஏபி சார்பில் சூ போ யீ, நோர் சுலைலா, லீ வென் யிங், வோங் போர் யாங் மற்றும் முகமட் ஷாப்வான் அனி ஆகிய ஐந்து வேட்பாளர்களும், பிகேஆர் (PKR) சார்பில் புக்கிட் பத்து தொகுதியைத் தற்காப்பதற்காக ஆர்தர் சியோங் சென் செர்னும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று இரவு முழுமையாகத் தெரியவருவார்கள்.