கோலாலம்பூர், பண்டார் தாசிக் செலாத்தான் (Bandar Tasik Selatan) பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தில் (TBS) அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைப் போக்குவரத்து வாரிய (JPJ) கிளை, வாரத்தில் ஏழு நாட்களும், இரவு 10:00 மணி வரை இயங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
மலேசிய அரசுப் பொதுச் சேவைத் துறையில் இதுவொரு புதிய மைல்கல் என்று குறிப்பிட்ட அமைச்சர், கோலாலம்பூரில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படவுள்ள முதல் JPJ கிளை இதுவே ஆகும் என்றார்.
நேற்று (ஜூன் 22) இப்புதிய கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோனி லோக், “பொதுமக்கள் அதிகம் கூடும் மற்றும் எளிதாக வந்து செல்லக்கூடிய போக்குவரத்து மையங்களில் JPJ கிளைகளை அமைப்பதன் மூலம், சேவைகளை மேலும் எளிதாக்க முடியும் என்ற புதிய அணுகுமுறையின் கீழ் இக்கிளை திறக்கப்பட்டுள்ளது.
TBS முனையம் என்பது வெறும் போக்குவரத்து மையம் மட்டுமல்ல, அது வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். பொதுமக்கள் இங்குத் தங்களின் JPJ காரியங்களுக்காக வரும்போது, காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்கள் தங்களின் இதர வேலைகளையோ, கடைகளையோ அல்லது உணவகங்களையோ நாடலாம். இது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும்” என்றார்.
இப்புதிய கிளை, TBS முனையத்தின் 3-ஆவது மாடியில் அமைந்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த பண்டார் ஸ்ரீ பெர்மாய்சூரி (Bandar Sri Permaisuri) JPJ கிளைக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய கிளையில் போதிய இடவசதி, பார்க்கிங் வசதிகள் இல்லாததாலும், நாளொன்றுக்கு 1,300-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலினாலும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 14,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இப்புதிய கிளை, நாளொன்றுக்கு 1,700 வாடிக்கையாளர்களைக் கையாளும் திறன் கொண்டது. இது முந்தைய கிளையை விட 30 சதவீதக் கூடுதல் செயல்திறனைக் கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் பெருமளவில் குறையும்.
பணியாளர்கள் ஷிப்ட் (Shift) முறையில் பணிபுரிவதால், இக்கிளை தினமும் காலை 8:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை தடையின்றி இயங்கும். சாதாரண அலுவலக நேரங்களில் அரசு அலுவலகங்களுக்கு வர முடியாத வேலைக்குச் செல்லும் நகர்ப்புறவாசிகளுக்கும், வார இறுதி நாட்களில் மட்டுமே நேரமிருக்கும் பொதுமக்களுக்கும் இச்சேவை பெரும் பயனுள்ளதாக அமையும்.
மேலும், இந்த அதிநவீன கிளையில் டிஜிட்டல் சுயசேவைக் கவுண்டர்கள் (Kiosks), ‘JPJeQ’ வரிசை மேலாண்மைச் செயலி மற்றும் ‘MyDigital ID’ போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளும் புகுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா, அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனா சந்திரா முனியாயன் மற்றும் JPJ தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.