Offline
Menu
இன்றுமுதல் RON97, RON95 மற்றும் டீசல் விலை அதிரடியாகக் குறைந்தது – நிதியமைச்சு அறிவிப்பு!
By Administrator
Published on 06/26/2026 08:00
News

மலேசியாவில் இன்று (ஜூன் 25) முதல் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான வாராந்திர எரிபொருள் விலைப் பட்டியலில், மானியமற்ற ரோன்97, ரோன்95 பெட்ரோல் மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு (MOF) அறிவித்துள்ளது.

கடந்த வாரம் சர்வதேச சந்தையில் நிலவிய கச்சா எண்ணெய் விலையின் சராசரி வீழ்ச்சிக்கு ஏற்ப இந்த சில்லறை விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விலையின்படி, தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 30 காசுகள் குறைந்து, RM4.07 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னர் லிட்டருக்கு RM4.37 ஆக இருந்தது.

அதேநேரம் மானியமற்ற RON97 லிட்டருக்கு 25 காசுகள் குறைந்து, RM4.10 ஆக விற்பனை செய்யப்படுகிறது, மானியமற்ற RON95 லிட்டருக்கு 25 காசுகள் குறைந்து, RM3.47 ஆக விற்கப்படுகிறது.

அதே வேளையில், ‘BUDI95’ திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 14 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை RON95 பெட்ரோல் விலை எவ்வித மாற்றமுமின்றி லிட்டருக்கு RM1.99 ஆகத் தொடர்கிறது.

மேலும், சபா, சரவாக் மற்றும் லபுவான் ஆகிய மாநிலங்களில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும், பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் மானிய விலை பெட்ரோல் லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கிறது.

நாடு தழுவிய அளவில் டீசல் மானியங்களை முறைப்படுத்துவதற்காக, மதானி அரசாங்கம் வரும் ஜூலை 1, 2026 முதல் புதிய ‘புடி மாடானி டீசல்’ திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. இப்புதிய திட்டத்தின் கீழ், தகுதிபெறும் தனியார் டீசல் வாகன உரிமையாளர்கள் தங்களின் ‘மைகார்ட்’ (MyKad) அடையாள அட்டையைப் பயன்படுத்தி லிட்டருக்கு RM2.10 என்ற மானிய விலையில் டீசலை கொள்வான் செய்யலாம்.

அதே வேளையில் மீனவர்கள், சிறுதோட்ட உரிமையாளர்கள், வணிகத் துறை மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறையினருக்கான டீசல் மானியங்கள் தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றச் சூழல் தணிந்து வருவதும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சீராகி வருவதுமே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், உலகச் சந்தையில் இன்னும் நடுத்தர கால நிச்சயமற்ற தன்மைகள் நிலவுவதால், நாட்டின் எரிபொருள் தேவையைப் பாதுகாக்கவும், பொதுமக்களைப் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து காக்கவும் துர்க்மெனிஸ்தான், ரஷ்யா போன்ற சர்வதேச நாடுகளுடன் கூட்டுறவை அரசாங்கம் பலப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments