Offline
Menu

LATEST NEWS

பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது: கலெக்டர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
By Administrator
Published on 07/01/2026 08:00
News

சென்னை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு இன்று காலை 9.30 தொடங்கியது. இதில் முதல் அமைச்சர் விஜய் பேசியதாவது: வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசாக இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளில் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.சட்டம் ஒழுங்கு பிரச்சினையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறிகூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

நூறு சதவீதம்

பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் மாற்றம் இல்லாமலும், சமரசம் இல்லாமலும் செயல்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும். அதன்படி, மாவட்ட கலெக்டர்களும் போலீஸ் சூப்பிரண்டுகளும் இதில் கூர்மையான மற்றும் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும்.

பாதுகாப்பற்ற பகுதிகள்

மாணவ, மாணவிகள், குழந்தைகள் பாதுகாப்பிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேர்வில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட இடங்களில் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். 2-ம் நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

சகிக்க கூடாது

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவேகூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோகூடாது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments