ஜோகூர் டைகர்ஸ் ரக்பி அணி; 2026ஆம் ஆண்டுக்கான ஆகோங் கோப்பையை வென்று ஜோகூருக்கு பெருமை சேர்த்திருப்பது ஒட்டுமொத்த “பங்சா ஜோகூர்” மக்களுக்கும் பெருமைமிக்க தருணமாகும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
இவ்வெற்றி வெறும் கோப்பையை மீட்டெடுத்த சாதனையாக மட்டுமல்லாமல், போராட்ட மனப்பான்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவை வெற்றிக்கான அடித்தளமாக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜோகூரில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து ஆதரவு, அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை வழங்கி வரும் ஜோகூர் அரசப் பிரதிநிதியும், ஜோகூர் பட்டத்து இளவரசருமான துலி யாங் அமாத் மூலியா துங்கு மகோத்தா இஸ்மாயிலுக்கு தனது ஆழ்ந்த நன்றியையும் விசுவாசமான மரியாதையையும் மந்திரி பெசார் தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், அணியின் நிர்வாகத்தினர் மற்றும் பின்னணியில் அயராது உழைத்த அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
கடின உழைப்பு, ஒற்றுமை, உறுதியான குழு ஒருங்கிணைப்பு மற்றும் சவால்களை தளராமல் எதிர்கொண்ட மனப்பாங்கின் பலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வெற்றி ஜோகூரில் ரக்பி விளையாட்டின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமையும் என்ற நம்பிக்கையையும் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் வெளிப்படுத்தினார்.