Offline
Menu
காஜாங் அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் : வெளிநாட்டுத் தம்பதிக்கு வலைவீச்சு!
By Administrator
Published on 07/01/2026 12:00
News

சிலாங்கூர், காஜாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சூட்கேஸிற்குள் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், தலையில் வெட்டப்பட்டதால் ஏற்பட்ட பலத்த காயத்தாலேயே உயிரிழந்துள்ளார் என்பது பிரேதப் பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது.

நேற்று மாலை நிறைவடைந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையின் விவரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்த காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப், “அப்பெண்ணின் உடல் உறுப்புகள் எதுவும் சிதைக்கப்படவில்லை; உடல் முழுமையாகவே சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது” என்று உறுதிப்படுத்தினார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு விரைந்து சோதனையிட்டனர். அப்போது வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸிற்குள் அழுகிய நிலையில் அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை நடந்த அந்த வீடு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெளிநாட்டுத் தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் தலைமறைவாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து எவ்வித அடையாள ஆவணங்களும் கைப்பற்றப்படாததால், அவரின் பெயர், இனம் அல்லது எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை இன்னும் கண்டறிய முடியவில்லை.

இக்கொலைச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது சமீபநாட்களாக தங்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது பணியாளர்களைக் காணவில்லை எனத் தேடுபவர்கள், உடனடியாக காஜாங் மாவட்டப் போலீஸ் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments