Offline
Menu
ரவுடி கும்பலின் வெறிச்செயல்: ‘AK Boy’ என்ற மேளக் கலைஞர் கொலை – நீதி கேட்க்கும் தாய்!
By Administrator
Published on 07/03/2026 10:00
News

பொந்தியான், பெக்கான் நானாஸில் ரகசிய கும்பல் (Secret Society) நடத்தியதாகக் கூறப்படும் கொடூரத் தாக்குதலில், ‘ஏகே பாய்’ (AK Boy) என்று அழைக்கப்படும் 22 வயது இந்திய பாரம்பரிய உடுமி மேளக் கலைஞர் மற்றும் குழுத் தலைவர் ஆர். அருண் குமார் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து அவரது தாய் கண்ணீருடன் நீதி கேட்டுள்ளார்.

கடந்த மே 21 அன்று அதிகாலை உணவகம் ஒன்றின் முன்பாகத் தனது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளதாக 52 வயது இல்லத்தரசி கே. தேவி தெரிவித்தார்.

சாலெங்கில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அவர்களுக்கு என் மகன் மீது ஏதேனும் அதிருப்தியோ அல்லது பகையோ இருந்திருந்தால், அவனைக் கொலை செய்யும் அளவிற்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவன் மிகவும் அமைதியானவன், பழக இனிமையானவன்; எப்போதும் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பவன்,” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

உடுமி மேளக் குழுவின் தலைவரான அருண் குமார், கடந்த மே 20-ஆம் தேதி மாலை 6:00 மணியளவில் தனது வீட்டு வாசலில் இருந்து நண்பர் ஒருவருடன் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. மறுநாள் மே 21 அதிகாலை 3:00 மணியளவில் உறவினர்கள் மூலமாகவே அருண் குமார் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.

பிறவியிலேயே இதய நோய் பாதிப்பு இருந்தபோதிலும், அருண் குமார் தனது திறமையால் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக விளங்கியுள்ளார். உடுமி மேளக் கலையை இன்னும் பெரிய அளவில் வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தனது அத்தைக்கு உதவியாக இருந்து இக்குழுவை வழிநடத்தி வந்துள்ளார்.

“பொது இடத்தில் ரவுடிகள் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் என் மகன் பலியாவான் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று தேவி ஆதங்கப்பட்டார்.

இக்கொலை வழக்கு தொடர்பாக 18 முதல் 28 வயதுக்குட்பட்ட ஏழு இளைஞர்கள் கடந்த ஜூன் 3-ஆம் தேதி பொந்தியான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் மீது தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலைக்குற்றம்) அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Comments