மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவை பெர்மிம் நிர்வாகிகள், தேசிய பதிவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அவர்களை சமிபத்தில் புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். பெர்மிம் சார்பில் அதன் தலைவர் முஹம்மது அஸ்மான் ஷா தலைமையிலான குழுவில் துணைத் தலைவர் ஹாஜி முஹம்மது சுல்தான், துணைத் தலைவர் ஜரீனா பேகம் மற்றும் உதவிப் பொருளாளர் டத்தின் சப்ரினா ஆகியோர் கலந்து கொண்டனர். JPN சார்பில் தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பெர்மிம் மற்றும் JPN இடையிலான ஒத்துழைப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, நாடு முழுவதும் உள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக குடியுரிமை தொடர்பான சிக்கல்கள், அடையாள அட்டை சம்பந்தப்பட்ட விவகாரங்கள், மேலும் பிறப்புச் சான்றிதழில் உள்ளிட்ட சிக்கல்கள் பெர்மிம் தரப்பில் முன்வைக்கப்பட்டன.பெர்மிம் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்ற JPN தலைமை இயக்குநர், இந்திய முஸ்லிம் சமூக நலனுக்காக தனது துறையின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
இந்த மரியாதை நிமித்த சந்திப்பு, பெர்மிம் மற்றும் JPN இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகக் கருதப்படுவதுடன், இந்திய முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை ஆவண மற்றும் அடையாளப் பதிவு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை உருவாக்கும் வழிவகையை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என மலேசியாவில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக 53 ஆண்டுகளாகப் பணியாற்றி மலேசியாவில் சங்கங்களின் பதிவு இலாகாவில் பதியப்பட்ட அரசுசாரா அமைப்புகளின் தாய் சபையாக போற்றப்படும் பெர்மிம்மின் தலைவர் அஸ்மான் ஷாஹ் கூறினார்.