Offline
Menu

LATEST NEWS

குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: 2027-க்குள் 300 புதிய மழலையர் முன்பள்ளிகளைத் திறக்கிறது மடானி அரசு!
By Administrator
Published on 07/08/2026 08:00
News

நாட்டின் ஆரம்பப்பள்ளிக் கல்வித் துறையை வலுப்படுத்தும் நோக்கில், வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் 300 புதிய மழலையர் பள்ளி (Preschool) வகுப்புகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.

இதன் மூலம் 2023 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் திறக்கப்படும் புதிய முன்பள்ளி வகுப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,040 ஆக உயரும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்குத் தரமான மற்றும் இலவச ஆரம்பக் கல்வி சமமாகவும் பரவலாகவும் கிடைப்பதை உறுதி செய்வதில் மடாணி அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு இது ஒரு சான்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது கல்வி அமைச்சு, சமூக மேம்பாட்டுத் துறை (Kemas), மற்றும் தேசிய ஒற்றுமை-ஒருங்கிணைப்புத் துறை (Tabika Perpaduan) ஆகிய மூன்று நிறுவனங்களின் கீழ் கடந்த மே 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 22,808 முன்பள்ளி வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4 முதல் 6 வயதுடைய 455,446 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

மழலையர் பள்ளிக் கல்வியை ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, கல்வி அமைச்சு, கிராமப்புற-பிராந்திய மேம்பாட்டு அமைச்சு, தேசிய ஒற்றுமை அமைச்சு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

13-ஆவது மலேசியத் திட்டம் (13MP) மற்றும் மலேசிய கல்வித் திட்டம் 2026-2035 ஆகியவற்றின் இலக்குகளுக்கு ஏற்ப, கல்வி இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் ‘2026 முன்பள்ளிப் பாடத்திட்டம்’ (Preschool Curriculum 2026) தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய வகுப்பறைகளை அமைப்பதற்கான இடங்கள் தகுதியான குழந்தைகளின் எண்ணிக்கை, உள்ளூர் தேவை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் ஃபத்லினா சிடெக் மேலும் விளக்கமளித்தார்.

Comments