Offline
Menu
பண்டிகைக் காலத்திலும் விலையேறாது! கோலாலம்பூர் – கூச்சிங் கட்டணம் ஆண்டு முழுவதும் RM375 மட்டுமே: ஏர்போர்னியோ அதிரடி!
By Administrator
Published on 07/09/2026 08:00
News

சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான ஏர்போர்னியோ (AirBorneo) விமான நிறுவனம், குறிப்பாக சரவாக் மாநில மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும், விமானக் கட்டணங்களை நிலைப்படுத்தவும் கோலாலம்பூர் – கூச்சிங் வழித்தடத்திற்கான ஒருவழிப் பயணக் கட்டணத்தை ஆண்டு முழுவதும் 375 ரிங்கிட்டாக மாறாமல் அப்படியே தக்கவைத்துக் கொள்ளவுள்ளது.

கடந்த ஆறு மாத கால விமானக் கட்டணத் தரவுகள், எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் இதர விமான நிறுவனங்களின் கட்டண ஒப்பீடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்த பிறகே இந்த 375 ரிங்கிட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மேகாட் ஆர்டியன் வீரா அமினுடின் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சிப்பாங், கேஎல்ஐஏ டெர்மினல் 1 (KLIA Terminal 1) மற்றும் கூச்சிங் அனைத்துலக விமான நிலையம் இடையே தினமும் இருமுறை இந்தச் சேவை இயக்கப்படவுள்ளது.

இச்சேவையின் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சரவாக்கு சாயாங்” (Sarawakku Sayang) திட்டத்தின் கீழ், விமான நிலைய வரிகள் மற்றும் எரிபொருள் கூடுதல் கட்டணங்கள் (Airport taxes and fuel surcharges) உட்பட அனைத்துக் கட்டணங்களும் உள்ளடங்கிய (All-in) ஒருவழிப் பயணக் கட்டணமாக எக்கனாமி வகுப்பு (Economy Class): 375 ரிங்கிட்டாகவும், வர்த்தக வகுப்பு (Business Class): 736 ரிங்கிட்டாகவும் நிர்ணயித்துள்ளது.

“தீபகற்ப மலேசியாவுக்கும் சரவாக் பிராந்தியத்திற்கும் இடையே நிலவும் அதிகப்படியான விமானக் கட்டணமே பயணிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. பிற விமான நிறுவனங்கள் சில நேரங்களில் இதைவிடக் குறைவான அடிப்படைக் கட்டணத்தை (Base fare) விளம்பரப்படுத்தினாலும், அதில் இதர கூடுதல் கட்டணங்கள் சேர்க்கப்படுவதில்லை. எனவே, பண்டிகைக் காலங்கள் அல்லது பருவகால மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், எதிர்காலத்தில் கட்டணங்களை நிலைப்படுத்துவதற்காகவே இந்த ஆண்டு முழுமைக்குமான நிலையான கட்டணத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்று அதன் தலைமை நிர்வாகி கூறினார்.

சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான இந்த ஏர்போர்னியோ விமான நிறுவனத்தின் இந்த புதிய வழித்தடத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஜூலை 20-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து கூச்சிங்கிற்கு முதல் விமானம் இயக்கப்படவுள்ளதோடு, ஜூலை 21 முதல் தினசரி இருமுறை வழக்கமான சேவைகள் முழு வீச்சில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments