Offline
Menu

LATEST NEWS

ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்!
By Administrator
Published on 07/13/2026 09:00
News

கோலாலம்பூர்:

நேற்று நடந்து முடிந்த 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், பதிவான மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு பங்கு (1/8) வாக்குகளைப் பெறத் தவறியதால் மொத்தம் 55 வேட்பாளர்கள் தங்களது வைப்புத் தொகையை (Deposit) இழந்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் (EC) அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் தான் மிக அதிகமாக 21 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். (அவர்களில் பெர்சத்து-16, பாஸ்-11, எம்.ஐ.பி.பி-5, பெஜுவாங்-1). அத்தோடு, கடந்த 2022 தேர்தலில் தாங்கள் வென்றிருந்த புக்கிட் கெப்போங், மகாராணி, எண்டாவ் ஆகிய 3 தொகுதிகளையும் இம்முறை PN கோட்டைவிட்டுள்ளது.

கட்சிகள் வாரியாக நோக்கினால்,நாட்டின் அரசியல் களத்தில் புதிய வரவாக நுழைந்த பார்ட்டி பெர்சாமா மலேசியா (Bersama), போட்டியிட்ட அனைத்து 15 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து படுதோல்வி அடைந்துள்ளது.

அத்தோடு பாக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியில் 7 வேட்பாளர்கள் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

மேலும் தேர்தலில் போட்டியிட்ட 6 சுயேச்சை வேட்பாளர்கள், மூடா (MUDA) கட்சியின் 4 வேட்பாளர்கள், அஸ்லி (ASLI) மற்றும் பி.எஸ்.எம் (PSM) கட்சிகளின் தலா ஒரு வேட்பாளர் என அனைவரும் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட 18 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் வேட்பாளர்களில், சுமார் 41 விழுக்காட்டினர் (51 பேரில் 21 பேர்) தங்களின் வைப்புத் தொகையை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி 48 இடங்களைக் (அம்னோ 36, மசீச 8, மஇகா 4) கைப்பற்றி பிரம்மாண்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாக்காத்தான் ஹரப்பான் 8 இடங்களை மட்டுமே வென்ற வேளையில், மற்ற எந்தவொரு கட்சியும் அல்லது சுயேச்சைகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments