Offline
Menu
மலேசியாவில் ஜூன் வரை 42,807 பேர் வேலை இழப்பு: தயாரிப்புத் துறையிலேயே பாதிப்பு அதிகம்!
By Administrator
Published on 07/14/2026 09:00
News

மலேசியாவில் 2026-ஆம் ஆண்டு ஜூன் 12 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 42,807 தனிநபர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

வேலை இழந்த தொழிலாளர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், சமூக பாதுகாப்பு அமைப்பான ‘பெர்கேசோ’ (PERKESO), ‘லிண்டோங் கெர்ஜெயா’ (LINDUNG Kerjaya) திட்டத்தின் கீழ் மொத்தம் RM248.23 மில்லியன் நிதியுதவியை உள்ளடக்கிய 134,123 பயன்முறைகளுக்கான கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டுச் செயல்பாட்டுச் செலவினங்களின் உயர்வு மற்றும் உலகளாவிய சந்தை தேக்கநிலை காரணமாக தயாரிப்புத் துறை (Manufacturing Sector) மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் அதிகபட்சமாக 8,702 பேர் (20.7%) வேலை இழந்துள்ளனர்.

அடுத்து, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 7,560 ஊழியர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர்.

மேலும் நிர்வாகம் மற்றும் ஆதரவு சேவைத்துறையில் 4,239 ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலை இழந்த 56,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குப் மறுவேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவி வழங்க ‘லிண்டோங் கெர் ஜெயா’ திட்டத்தின் கீழ் RM580 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

வேலை தேடுபவர்களுக்கான படி (EMP), வருமானக் குறைப்புப் படி (EPB), மீண்டும் வேலைக்குச் சேருபவர்களுக்கான ஆரம்பப் படி (EBSA) ஆகியவற்றுடன், ஊழியர்களின் திறனை மேம்படுத்தப் பயிற்சி கட்டணங்களும் (FL) பயிற்சிக் கொடுப்பனவுகளும் (EL) வழங்கப்படுகின்றன.

உள்ளூர் தொழிலாளர்களின் நலனைக் காக்க, வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச் சட்டம் [சட்டம் 800]-இல் திருத்தங்களை மனிதவள அமைச்சு (KESUMA) மேற்கொண்டு வருகிறது. வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்களுக்குத் தொழிலாளர்கள் இடம்பெயர்வதை ஊக்குவிக்க ‘நடமாட்ட உதவிப் படி’ (Mobility Assistance Allowance) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல பெர்கேசோ அதிகாரிகள் வேலை இழந்தவர்களுக்குத் தொழில்முறை ஆலோசனைகளையும், தகுதிக்கேற்ற வேலைகளையும் தேடித் தந்து வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் மே 31 வரை நாடு முழுவதும் 2,989 வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பங்கேற்ற 86,594 வேலை தேடிகளில், 14,029 பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதுடன், 15,809 விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Comments