Offline
Menu

LATEST NEWS

ஈப்போவில் 148 சட்டவிரோத குப்பைக் கிடங்குகள்: RM185,000 அபராதம் விதித்து மாநகராண்மை கழகம் அதிரடி!
By Administrator
Published on 07/18/2026 12:00
News

ஈப்போ மாநகர எல்லைக்குள் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி, மொத்தம் 148 இடங்கள் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்படும் இடங்களாகக் (Illegal dumping hotspots) கண்டறியப்பட்டுள்ளதாக ஈப்போ மாநகர மேயர் ஜமாக்ஷாரி ஹனிபா தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 17) பெங்காலான் தியாரா (Pengkalan Tiara) பகுதியில் நடைபெற்ற “நெருக்கடி இல்லாத, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான பேராக்” (Perak Best 3.0) திட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நகரின் முக்கியப் பகுதிகளில் 431 எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், சட்டவிரோதமாகக் குப்பை கொட்டிய குற்றத்திற்காக மொத்தம் 711 கூட்டு அபராத நோட்டீஸ்கள் (Compounds) வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வசூலிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை RM184,750 ஆகும்.

மேலும் நகரைத் தூய்மையாக வைத்திருக்க கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘இலவசக் குப்பைத் தொட்டி விநியோகத் திட்டத்தின்’ கீழ், நடப்பு ஜூலை மாதம் வரை ஈப்போ மக்களுக்குப் படிப் படியாக மொத்தம் 156,291 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

‘உள்ளூர் அஜெண்டா 21’ (LA 21) இன் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் தூய்மைத் திட்டத்தின் மூலம், சட்டவிரோத குப்பைக் கிடங்குகளைச் சுத்தம் செய்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குதல், வீதிகளைப் பெருக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு, டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் (Aedes) கொசுப்புழுக்கள் குறித்த சோதனைகளும், கொசு மருந்து தெளிக்கும் (Fogging) பணிகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. நகரின் தூய்மையைப் பராமரிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு இந்த நிகழ்வின் போது ‘சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்கள்’ வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Comments