சரவாக்கின் பாவ் நகரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறையில் இன்று காலை ஒரு பெண் ஆசிரியை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 55 வயதான அந்தப் பெண், ஆசிரியர்கள் கழிப்பறையின் தரையில் அசைவற்று கிடந்ததாகவும், காலை 9.08 மணிக்கு மருத்துவ அதிகாரிகள் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதாகவும் பாவ் காவல் துறைத் தலைவர் ஹைடே ஏ ரஹ்மான் கூறினார்.
அந்தப் பெண் 25 ஆண்டுகளாக அப்பள்ளியில் அறிவியல் மற்றும் உயிரியல் கற்பித்து வந்ததாக ஹைடே கூறினார். காலை 8.15 மணியளவில் கழிப்பறைக்குச் செல்வதற்கு முன்பு அவர் கடைசியாக ஆசிரியர்கள் அறையில் காணப்பட்டதாக பெரிட்டா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. காலை சுமார் 8.35 மணியளவில், தனது சக ஆசிரியை இன்னும் வகுப்பறைக்குச் செல்லாததை மற்றொரு ஆசிரியை கவனித்ததையடுத்து, பள்ளி ஊழியர்கள் அவரைக் கழிப்பறையில் தேடினர்.
அவர்கள் கழிப்பறைக் கதவைத் திறந்தபோது, பாதிக்கப்பட்டவர் தரையில் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டனர். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தவிதமான குற்றச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை என்றும் பாவ் காவல் துறைத் தலைவர் ஹைடே ஏ ரஹ்மான் கூறினார். ஆசிரியரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.