Offline
Menu
கூட்டுப் பணக் கடனால் தலைமறைவான தம்பதி காவல் நிலையத்தில் சரண்!
By Administrator
Published on 08/07/2026 15:00
News

கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட கணவனும் மனைவியும் இன்று அதிகாலை காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கூட்டுப் பணம்’ தொடர்பான கடன் காரணமாகவே இவர்கள் தலைமறைவாகியிருந்ததாக நம்பப்படுகிறது.

39 மற்றும் 36 வயதுடைய அத்தம்பதியினர் இன்று அதிகாலை 1:50 மணியளவில் குபாங் பாசு மாவட்டக் காவல் தலைமையகத்தில் தாமாகவே வந்து சரணடைந்ததாகக் குபாங் பாசு மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டன் முகமட் ராட்ஸி அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

புக்கிட் காயு ஹித்தாம், தாமான் தேசா பயான்மாஸ் பகுதியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து கடந்த ஜூலை 20 அன்று இந்தத் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் வெளியேறிய பிறகு, அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததால், பெண்ணின் 62 வயது தந்தை நேற்று புக்கிட் காயு ஹித்தாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள கணவன்-மனைவி இருவரையும் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறை இன்று காலை ஜித்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளது.

Comments