Offline
Menu
பாகான் டத்தோ WCE சாலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
By Administrator
Published on 08/07/2026 16:00
News

காணாமல் போன நபர் மரணம்!

பேராக் மாநிலம், பகான் டத்தோ பகுதியில் உள்ள மேற்கு கடற்கரை விரைவுச்சாலையான WCE-இன் வடிகால் ஒன்றில் கடந்த ஜூலை 29-ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாகான் டத்தோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் அலி ஜாலி கூறுகையில், நேற்று மாலை 3 மணி அளவில் அந்தச் சாலையில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர், கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தெலுக் இந்தானிலிருந்து சாபாக் பெர்னாம் நோக்கி சென்று கொண்டிருந்த பாதிக்கப்பட்டவர் தனிமையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கால்வாயில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறினர்.

35 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடலையும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். அவரிடம் இருந்த கைப்பேசி, மலேசிய கடவுச்சீட்டு மற்றும் ரொக்கப் பணம் ஆகிய தனிப்பட்ட பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கடந்த வாரமே தெலுக் இந்தான் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகாரளித்திருந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 1987 மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த காவல்துறையினர், இதுகுறித்து மேலதிகத் தகவல் அறிந்தவர்கள் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி நோர்மா அபு ஹசானைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments