Offline
Menu
RM700,000 மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!
By Administrator
Published on 08/08/2026 15:00
News

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட 4 அதிரடிச் சோதனைகளின் மூலம் RM698,328 மதிப்பிலான வரி செலுத்தப்படாத கடத்தல் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களைப் பறிமுதல் செய்து, கடத்தல் கும்பலை ஜோகூர் மாநில அரச சுங்கத்துறை முறியடித்துள்ளது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளின் போது 20 முதல் 60 வயதுக்குட்பட்ட 4 உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் சுங்கத்துறை இயக்குநர் அமீனுல் இஸ்மீர் முகமட் சுஹைமி தெரிவித்துள்ளார்.

ஜூன் 11 இல் தாமான் பஹாகியா, பத்து பஹாட்டில் நடந்த முதல் சோதனையில் ஒரு வீட்டிலிருந்து 22,560 சிகரெட்டுகள் மற்றும் 394.42 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் RM180,000 மதிப்பிலான ‘Toyota Vellfire’ காரும் பறிமுதல் செய்யப்பட்டது. (பொருட்கள் மற்றும் வரிகள் உட்பட மொத்த மதிப்பு: RM239,513)

ஜூன் 25 இல் கம்போங் பாரிட் காசிம், பத்து பஹாட்டில் நடந்த இரண்டாவது சோதனையில், வீட்டின் ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,34,430 சிகரெட்டுகள் மற்றும் 501.25 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. (மொத்த மதிப்பு: RM173,101)

அதுபோல ஜூலை 6 இல் ஜாலான் கிம் கீ, மூவாரில் சாலையில் வழிமறிக்கப்பட்ட ‘Proton X70’ காரிலிருந்து 39,600 கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இறுதியாக ஜூலை 8 இல் பஹாவ், நெகிரி செம்பிலானில் நடந்த நான்காவது சோதனையில் 64,800 சிகரெட்டுகளுடன், ஒரு ‘Mercedes-Benz CLA 200’ காரும் பறிமுதல் செய்யப்பட்டது. (மொத்த மதிப்பு: RM173,483)

இதன்போது கைது செய்யப்பட்ட 4 நபர்கள் மீதும் 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் பிரிவு 135-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments