ஜோகூர் மாநிலத்தில் சிறு வியாபாரிகள், சில்லறை வணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் முதல் ஆண்டுக்கான வணிக உரிமக் கட்டணத்தை விலக்கவும், குறைந்த ஆபத்துள்ள வணிகங்களுக்கான உரிம விண்ணப்பங்களை 24 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கவும், வணிக உரிமப் புதுப்பிப்பை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இத்திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில வீடமைப்பு, ஊராட்சித் துறை ஆட்சிக்குழுத் உறுப்பினர் டத்தோ முகமது ஜஃப்னி முகமது ஷுகோர் தெரிவித்தார். இதற்கான முன்னோட்டச் சோதனை வரும் டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில ஊராட்சி துறையின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள், முக்கிய செயல்திறன் குறியீட்டு இலக்குகள், திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸியிடம் தாம் விளக்கமளித்ததாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரப்படி மாநில அரசுச் செயலாளர் அலுவலகத்தின் ஊராட்சித் துறை பிரிவு, ஊராட்சி அமைப்புகள் சார்ந்த 69 முக்கிய செயல்திறன் குறியீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 33 திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 25 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், எஞ்சிய 11 திட்டங்கள் ஒப்புதல், ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் உள்ளன. எந்தத் திட்டமும் இன்னும் தொடங்கப்படாத நிலையில் இல்லை என ஜஃப்னி தெரிவித்தார்.