பொந்தியான், குக்குப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு, கடற்கரை அரிப்பு கட்டுப்பாடு, மீனவர் வசதி மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில விவசாயம், விவசாய அடிப்படைத் தொழில், ஊரக மேம்பாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினரும், குக்குப் சட்டமன்ற உறுப்பினருமான இஸ்ராக் அப்துல்லா தெரிவித்தார்.
பொந்தியான் மாவட்ட நீர்ப்பாசன, வடிகால் துறைக்கு மேற்கொண்ட பணிமுறைப் பயணத்தின்போது சம்பந்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றதாக அவர் கூறினார்.
தாமான் ஸ்ரீ பந்தாய் பகுதியில் கடற்கரை அரிப்பைக் கட்டுப்படுத்த பாறைத் தடுப்புச் சுவர், பாதுகாப்புக் கரை மேம்பாட்டுப் பணிகள் முக்கிய கவனம் பெற்றன. கடற்கரை அரிப்பு, கடல் வெள்ளம் போன்ற அபாயங்களிலிருந்து குடியிருப்புப் பகுதிகளைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
லோரோங் செனி சாயோங்கில் அரிப்புக்குள்ளான கடற்கரையை மீட்டெடுக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கடற்கரையை நிலைப்படுத்தி, அருகிலுள்ள வீடுகள், பொது வசதிகள், அடிப்படை கட்டமைப்புகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
செர்காட்டில் உள்ள பெங்காலான் பெங்குலு மீனவர் படகுத்துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் படகுத்துறை சீரமைப்பு, படகுகள் நிறுத்தும் வசதி, ஓய்வுக்கூடம் அமைத்தல், ஆற்றுமுகத்தை ஆழப்படுத்துதல் போன்ற பணிகளின் முன்னேற்றமும் ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டம் உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்கை டூரியான், செர்காட் பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில் நீரேற்று நிலைய கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தஞ்சோங் பின் முதல் தம்போக் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடற்கரை அரிப்பைக் கட்டுப்படுத்தும் நீண்டகாலத் திட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
“மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்கள் திட்டமிடப்பட்டதுடன் நின்றுவிடாமல், அவற்றின் செயலாக்கம், முன்னேற்றம், களத்தில் ஏற்படுத்தும் பயன் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். பொந்தியானின் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் கவனத்திற்கு மக்களின் தேவைகளைத் தொடர்ந்து கொண்டு செல்வேன்,” என இஸ்ராக் அப்துல்லா தெரிவித்தார்.