Offline
Menu
“எல் நினோ” தாக்கத்தால் சரவாக்கில் புகைக் மூட்டம்: 9 பகுதிகளில் காற்றுத் தரம் பாதிப்பு!
By Administrator
Published on 08/11/2026 16:00
News

சரவாக் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் புகை மூட்டமான சூழ்நிலையையடுத்து பொதுமக்கள் அனைவரும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி ஓபெங் வலியுறுத்தியுள்ளார்.

கூச்சிங்கில் நடைபெற்ற ரீஜென்சி சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போதைய நிலைமை முந்தைய காலங்களை விட மோசமாக இல்லாவிட்டாலும், எல் நினோ (El Niño) வானிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தற்காலிகமானது என்ற போதிலும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், துணைப் பிரீமியேர் டத்தோ டக்ளஸ் உக்கா தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (SDMC) நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி, சரவாக்கின் 9 பகுதிகளில் காற்று மாசடைவு குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. செரியான் பகுதி அதிகபட்சமாக 182 என்ற அளவைப் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமராஹான் (165), கூச்சிங் (164), சிபு, முக்கா (தலா 157), பிந்துலு, சாரிகே, ஸ்ரீ அமான் (தலா 152) மற்றும் சமலாஜு (151) ஆகிய பகுதிகளிலும் காற்று மாசடைவு அதிகரித்துள்ளது.

இதனிடையே, காற்று மாசடைவு குறியீடு 200 எனும் ஆபத்தான நிலையை எட்டினால் அனைத்து விதமான வெளிப்புற நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படும் என துணை முதல்வர் டத்தோ டாக்டர் சிம் குய் ஹியான் கூறினார். மேலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் வெளிப்புறங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அதிகளவு நீர் அருந்துமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

 

Comments