Offline
Menu
மலேசியா முழுவதும் 1,300 வேட்டைக்காரர்கள் கைது
By Administrator
Published on 08/12/2026 15:00
News

மலேசியாவில் காடுகளுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி வனவிலங்குகளை வேட்டையாடியது தொடர்பாக ‘Ops Bersepadu Khazanah’ (OBK) கூட்டு நடவடிக்கையின் கீழ் சுமார் 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து RM426.90 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விஸ்மா தருல் இமானில் நடைபெற்ற உலக வனக்காவலர் தின விழாவில் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் (Perhilitan) அமலாக்கப் பிரிவு முதன்மை உதவி இயக்குநர் முகமட் கைரி அகமட் இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த 2019 முதல் 2026 ஜூலை 31 வரை மேற்கொள்ளப்பட்ட 96 நடவடிக்கைகள் மூலம் 903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இதில் 961 உள்ளூர்வாசிகள் மற்றும் 323 வெளிநாட்டினரும் அடங்குவர் என்றும் அவர் சொன்னார்.

இக்கூட்டு நடவடிக்கைகளின் போது வனவிலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 2,869 கண்ணிகள் கண்டுபிடிக்கப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன. மேலும், சட்டவிரோத ஊடுருவல் தொடர்பான 933 கூடாரங்கள், 3,492 வேட்டை அடையாளங்கள் மற்றும் 2,741 அனுமதியற்ற நுழைவு அடையாளங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றுடன் சேர்த்து காடுகளை அழித்தல் மற்றும் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியது தொடர்பாக 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முகமட் கைரி தெரிவித்தார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் நிகழும் வனவிலங்கு கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்க பல்வேறு அரசு முகமைகள் இணைந்து இந்த OBK ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

Comments