கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2025-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 65 வழக்குகளை நெருங்குகிறது. போதைப்பொருட்களை விநியோகிக்க, கும்பல்களுக்கு கூரியர் சேவைகள் விருப்பமான முறையாக மாறி வருவதையே இந்த அதிகரிப்பு காட்டுகிறது என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) இயக்குநர் ஹுசைன் உமர் கான் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், 57 வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறை 1,545.17 கிலோ போதைப்பொருட்களையும், 13,957.38 லிட்டர் சட்டவிரோதப் பொருட்களையும் பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (1,347.54 கிலோ), கெத்தமைன் (65.38 கிலோ), கஞ்சா (59.11 கிலோ) மற்றும் எக்ஸ்டஸி மாத்திரைகள் (58.86 கிலோ) ஆகியவை அடங்கும்.
திரவ வடிவிலான போதைப்பொருட்களில், ஹெராயின் (9,887.4 லிட்டர்), MDMA (4,064 லிட்டர்) மற்றும் கோகைன் (3.98 லிட்டர்) ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்தது. சுமார் 4.96 கிலோ கெத்தும் மற்றும் இரண்டு லிட்டர் கெத்தும் கலவையும் கைப்பற்றப்பட்டன.
நேரடித் தொடர்புகள் இன்றி போதைப்பொருள் விநியோகத்தைக் கொண்டு செல்ல, கும்பல்களால் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்றாக கூரியர் சேவைகள் அதிகளவில் மாறிவருகின்றன என்பதை, 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் மற்றும் கைதுகளின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று தொடர்பு கொண்டபோது அவர் மலாய் நாளிதழிடம் கூறினார்.
பல முக்கிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விநியோகங்களில் அதிகபட்சமாக 22 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹுசைன் கூறினார். இதைத் தொடர்ந்து, இரண்டு விரைவு விநியோக மற்றும் கூரியர் நிறுவனங்கள் தலா ஐந்து வழக்குகளைப் பதிவுசெய்து, மூன்று கைதுகளை மேற்கொண்டன. ஒரு அனைத்துலக விநியோக நிறுவனம் நான்கு வழக்குகளையும் ஒரு கைதையும் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் மற்றொரு நிறுவனம் மூன்று வழக்குகளையும் மூன்று கைதுகளையும் பதிவு செய்துள்ளது.