Offline
Menu
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல்: முன்னாள் ஓட்டுநருக்கு 3 மாத சிறை தண்டனை!
By Administrator
Published on 08/12/2026 17:00
News

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்த வழக்கில், அவருடைய முன்னாள் ஓட்டுநருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கு விசாரணையின் போது, 39 வயதான முகமட் ஃபாரீஸ் முகமட் ஜின் என்ற அந்த முன்னாள் ஓட்டுநர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் ஹெங் யி மின் இந்தத் தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த மே 8-ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில், கோலாலம்பூர் உயர் நீதிமன்ற (சிவில்) வளாகத்தில் வைத்து, 64 வயதான உயர் நீதிமன்ற நீதிபதி கான் டெச்சியோங்கை (Gan Techiong) பயமுறுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த ஓட்டுநர் நீதிபதியின் செயலாளருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) வாயிலாக இரண்டு மிரட்டல் குரல் பதிவுகளை அனுப்பியதுடன், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு அவதூறான கருத்துக்களையும் மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.

இவ்வழக்கில் அரசுத் தரப்புப் வழக்கறிஞர் இமான் நூர்ஹிதாயா எஸானி வாதிடுகையில், “உடல் ரீதியான காயங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தச் செயல் நீதிபதியின் பாதுகாப்புக்கும் கண்ணியத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இது மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் வகையில் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் ஷா ரிசால் அப்துல் மனான், தனது கட்சிக்காரருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். குற்றவியல் சட்டம் பிரிவு 506-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில், நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனையை உறுதி செய்தது.

Comments