Offline
Menu
756,000 ஆஸ்திரேலியச் சிறாரின் கணக்குகளை முடக்கியது META
By Administrator
Published on 08/14/2026 15:00
News

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் 756,000க்கும் அதிகமான ஆஸ்திரேலியச் சிறார்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், 16 வயதிற்குட்பட்டோர் எனச் சந்தேகிக்கப்பட்ட 462,000 இன்ஸ்டகிராம் கணக்குகளையும் 294,000 ஃபேஸ்புக் கணக்குகளையும் முடக்கியதாக அந்நிறுவனம் கூறியது.

அச்சட்டத்திற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தடையைக் கண்டிப்புடன் பின்பற்ற விரும்புவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடையைப் பின்பற்றத் தவறிய சமூக ஊடக தளங்கள்மீது வழக்கு தொடுப்பது குறித்து ஆஸ்திரேலிய இணையக் கட்டுப்பாட்டு ஆணையம் பரிசீலித்து வருகிறது.

தடை நடப்பிற்கு வந்த முதல் மூன்று மாதங்களில் 16 வயதிற்குட்பட்ட சிறார்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வந்ததாக ஆஸ்திரேலிய அரசாங்கத் தரவுகள் கூறுகின்றன.

சிறார் மற்றும் பதின்ம வயதினரின் உடல், மனநலத்தைக் கருத்தில்கொண்டு, 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் 2025 டிசம்பர் 10ஆம் தேதிமுதல் தடை விதித்தது.

அச்சட்டத்தைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை 99 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக உயர்த்தவும் அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Comments