Offline
Menu
ஜோகூரைச் சூழும் எல்லை தாண்டிய புகைமூட்டம்
By Administrator
Published on 08/26/2026 14:00
News

தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் காற்றுத் தரம் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், பத்து பஹாட் மற்றும் தங்காக் ஆகிய பகுதிகளை எல்லை தாண்டிய புகைமூட்டம் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, சிகாமாட், பத்து பஹாட் மற்றும் தங்காக் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு 152 புள்ளிகளாகப் பதிவாகி ‘ஆரோக்கியமற்ற’ (Unhealthy) நிலையை அடைந்துள்ளது என்று, ஜோகூர் மாநிலச் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டாக்டர் முகமத் ஃபாமி யூசோஃப் தெரிவித்துள்ளார்.

101 முதல் 200 வரையிலான API குறியீடு ஆரோக்கியமற்ற பிரிவின் கீழ் வருகிறது. தொடர்ந்து இந்தச் சூழலில் இருப்பது, குறிப்பாக உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆசியான் சிறப்பு வானிலை மையத்தின் (ASMC) தரவுகளின்படி, இந்தோனேசியாவின் காலிமந்தானில் 287 தீப்பற்றல் புள்ளிகளும் (Hotspots), சுமத்ராவில் 65 புள்ளிகளும் கண்டறியப்பட்டுள்ளன. மலேசியாவில் 11 தீப்பற்றல் புள்ளிகள் பதிவாகியுள்ளன.

தெற்கு ஆசியான் பகுதியில் நிலவும் தொடர் வறண்ட வானிலை காரணமாக உருவாகும் புகைமூட்டம் வடக்கு நோக்கி நகர்ந்து, மலேசியாவின் மேற்குப் பகுதிகள் மற்றும் சரவாக்கைப் பாதித்து வருகிறது.

நிலைமையை எதிர்கொள்ளத் தேசியத் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கை திட்டம் மற்றும் தேசியப் புகைமூட்ட நடவடிக்கை திட்டம் ஆகியவை உடனடியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் துறையின் துணைத் தலைமை இயக்குநர் அஸூரி அஸீஸா சாய்டூன் தெரிவித்தார்.

திறந்தவெளியில் தீ வைக்கும் சம்பவங்களைத் தடுக்க சுற்றுச்சூழல் துறை தினசரி ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

2024 சுற்றுச்சூழல் தர (திருத்த) சட்டத்தின் கீழ், சட்டவிரோதமாகத் திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பவர்களுக்குக் குறைந்தபட்சம் RM25,000 முதல் அதிகபட்சமாக RM1 மில்லியன் வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Comments