நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட மலேசியப் பயணிகளை அவர்களது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளதாகக் கத்மண்டூவில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தொடர்புச் சேவை உள்கட்டமைப்புகள் (Communication infrastructure) கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று, கத்மண்டூவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்பாளர் முகமட் பிர்தவ்ஸ் அஸ்மான் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களைக் கண்டறிய விரும்புவோர், சம்பந்தப்பட்ட நபர்களின் கடப்பிதழ் (Passport) மற்றும் பயண விவரங்களை mwkathmandu@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதன்கிழமை இரவு நிலவரப்படி, பலி எண்ணிக்கை 160-ஐத் தாண்டியுள்ளது. நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர். ஜஹில் இந்தியாவைச் சேர்ந்த 142 பேரும் அடங்குவர்.
சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறை சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போட்டே கோஷி (Bhote Koshi) ஆற்றில் திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்திற்குள் பாய்ந்தது.
இதனால் 9 பாலங்கள் மற்றும் 40 கி.மீ தூர நெடுஞ்சாலை முழுமையாக அழிந்துள்ளதாகவும், சீன நேபாள் எல்லைப் பகுதியான திபெத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 265 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.