இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை கோலா நெருஸ், கம்போங் தோக் ஜெம்பால் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில் 40 வயது தந்தையும் அவரது 9 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தோக் ஜெம்பால் தேசியப் பள்ளிக்கு அருகே அமைந்திருந்த இரண்டு மாடி வீடொன்றில் (Semi-permanent house) அதிகாலை சுமார் 4:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது என்று, கோலா திரெங்கானு மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் அஸ்லி முகமட் நூர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்தவுடன், கோலா நெருஸ் மற்றும் கோலா திரெங்கானு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணிகளுக்காகத் தீயணைப்புத் துறையின் சிறப்பு வாகனங்கள் (FRT மற்றும் CFRT) பயன்படுத்தப்பட்டன என்றும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட சொத்து சேதங்களின் மதிப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.