Offline
Menu
காலை 9 மணி நிலவரப்படி மலேசியாவில் 16 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவு!
By Administrator
Published on 08/28/2026 10:00
News

இன்று (ஆகஸ்ட் 26) காலை 9 மணி நிலவரப்படி, மலேசியாவில் உள்ள 16 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தைப் (Air Pollutant Index – API) பதிவு செய்துள்ளதாக APIMS தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 68 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் மணிக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றன.

குறிப்பாக, சரவாக், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் காற்று மாசுபாடு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சரவாக்கில் உள்ள ஸ்ரீ அமான் பகுதியில் அதிகபட்சமாக 167 புள்ளிகளும், செரியான், சமராஹான் ஆகிய இடங்களில் முறையே 166, 162 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.

மேலும், நெகிரி செம்பிலான் மாநிலம், நிலாய் பகுதியில் 162 புள்ளிகளும், கோலாலம்பூர் செராஸ், புத்ராஜெயா பகுதிகளில் 159 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.

எல் நினோ நிகழ்வு, குறைந்த மழைப்பொழிவு, உள்நாட்டு மற்றும் அண்டை நாடுகள் அளவிலான திறந்தவெளி எரிப்புச் சம்பவங்களே இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணங்கள் என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள், சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் முகக்கவசம் அணியுமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Comments