மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (வயது 66) சொத்து விவரங்களை அறிவிக்காதது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்க இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இன்று காலை 8:30 மணியளவில் சக்கர நாற்காலியில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்த அவர், அங்கு அதிகாலை முதலே காத்திருந்த தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி மீதான குற்றச்சாட்டு, நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் வாசிக்கப்படவுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த நீதிமன்ற நடவடிக்கை, இஸ்மாயில் சப்ரி இதயப் பிரச்சனை காரணமாக தேசிய இதய நிறுவனத்தில் (IJN) அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரது வழக்கறிஞர் டத்தோ ஆமர் ஹம்சா அர்ஷாத் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்றைக்கு (ஆகஸ்ட் 27) ஒத்திவைக்கப்பட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (SPRM) அவர் அளித்த சொத்து விவரங்கள் குறித்து அவரிடம் ஏற்கனவே பலமுறை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்மாயில் சப்ரி மீதான ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக: பல்வேறு வெளிநாட்டு நாணயங்களில் RM170 மில்லியன் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தோராயமாக RM7 மில்லியன் மதிப்புடைய 16 கிலோகிராம் சுத்தமான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிப்ரவரி 2025-இல் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் சப்ரியின் நான்கு மூத்த அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது இருப்பிடங்கள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.