Offline
Menu
மலாக்கா சட்டமன்றம் கலைப்பு தேதி ரகசியம் – “நேரம் வரும்போது அறிவிப்பேன்”
By Administrator
Published on 08/30/2026 10:00
News

மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் தேதியை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை என மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூஃப் யூசோப் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தலுக்கு முன்கூட்டியே தேதியை அறிவித்தால், “ஆச்சரியத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்” என அவர் கூறினார்.

“நேரம் வரும்போது சட்டமன்றத்தைக் கலைப்பேன். இப்போதே சொன்னால் எந்தத் த்ரில்லும் இருக்காது. அதனால் என்ன பயன்?” என்று நேற்று தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற டிஜிட்டல் கிராமம் தொடர்பான திசை நிர்ணயப் பயிலரங்கின் நிறைவு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அவருடன் மாநில அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொடர்பாடல் குழுத் தலைவர் டத்தோ ஃபைருல் நிசாம் ரோஸ்லான் மற்றும் மலாக்கா மாநிலச் செயலாளர் டத்தோ சல்ஹா சாலே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் ரவூஃப் கூறுகையில், முன்கூட்டியே சட்டமன்றம் கலைக்கப்படாவிட்டால், வரும் டிசம்பர் 30ஆம் தேதி அது தானாகவே கலைந்துவிடும் என்றார்.

“இன்றிலிருந்து கணக்கிட்டால் இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. சட்டமன்றம் கலைக்கப்படும் போது ஒரு பரபரப்பு இருக்கும். இப்போதே சொன்னால் அந்த பரபரப்பு இருக்காது. என்னைத் தொடர்ந்து துரத்துங்கள்… முடிந்தால் பிடித்துப் பாருங்கள்,” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

இதனிடையே, மலாக்கா அம்னோ வசமுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் அப்துல் ரவூஃப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“21 தொகுதிகளில் நாங்கள் எந்த சமரசத்திற்கும் இடமளிக்க மாட்டோம். பேச்சுவார்த்தையில் எங்களின் நிலைப்பாடு இதுதான்,” என்றார்.

முன்னதாக தனது உரையில், எஸ்பி எம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் மாதத்திற்கு முன்பாகவே நடத்தப்படலாம் என்றும் அப்துல் ரவூப் சுட்டிக்காட்டினார்.

சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி குறித்து இனி ரகசியம் எதுவும் இல்லை என்றாலும், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் எஸ்பி எம் தேர்வு அட்டவணையை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Comments