மலேசியா முழுவதும் புகைமூட்டத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் 28 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீட்டைப் (API) பதிவு செய்துள்ளன.
குறிப்பாகச் சரவாக்கில் உள்ள ஸ்ரீ அமான் பகுதி மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.இன்று (ஆகஸ்ட் 29) காலை 10 மணி நிலவரப்படி, காற்றுத் தர மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, ஸ்ரீ அமான் பகுதியில் API குறியீடு 221 ஆகப் பதிவாகியுள்ளது. இது “மிகவும் ஆரோக்கியமற்றது” (Very Unhealthy) என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற காற்றைப் பதிவுசெய்த 28 பகுதிகளில் 8 பகுதிகள் சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ளன:சரவாக்கில் சேரியான் (194), சரிகேய் (190), கூச்சிங் (169), சமரஹான் (168), மூக்கா (165), சிபு (161), கபிட் (154), பின்டுலு (150).பிற மாநிலங்கள்: சுங்கை பட்டாணி (161), லங்காவி (157), ஆலோர் ஸ்டார் (155), பினாங்கு மிண்டன் (160), செபெராங் பிறை (156), கோலாலம்பூரின் செராஸ் (160), ஷா ஆலாம் (154), புத்ராஜாயா (153) உள்ளிட்ட பல இடங்கள் ஆரோக்கியமற்ற நிலையிலேயே உள்ளன.
நாடு முழுவதும் உள்ள 38 பகுதிகள் மிதமான காற்றுத் தரத்தைப் பதிவு செய்துள்ளன. அதேவேளையில் நல்ல காற்றுத் தரத்தைக் கொண்ட ஒரு பகுதி கூட நாட்டில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியான் சிறப்பு வானிலை மையத்தின் (ASMC) அறிக்கையின்படி, கலிமந்தானில் 1,738 தீப் புள்ளிகளும், சுமத்திராவில் 36 மற்றும் மலேசியாவில் 6 தீப் புள்ளிகளும் செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த தேசிய திறந்தவெளி எரிப்பு நடவடிக்கை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளியில் குப்பைகள் அல்லது நிலங்களை எரிப்பவர்களுக்கு எதிராகச் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 2024-இன் கீழ் RM25,000 முதல் RM1 மில்லியன் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.