Offline
Menu
அமெரிக்க பைலட் எனக் கூறி காதல் மோசடி! RM112,500 பணத்தைப் பறிகொடுத்த லாபுவான் பெண்!
By Administrator
Published on 08/30/2026 12:00
News

TikTok செயலி மூலம் அறிமுகமான போலி அமெரிக்க விமானியை நம்பி, லாபுவானைச் சேர்ந்த பெண் ஒருவர் RM112,500 பணத்தை இழந்து ‘லவ் ஸ்கேம்’ (Love Scam) காதல் மோசடியில் சிக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து லாபுவான் மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி சுப்ரண்டண்ட் வான் முகமட் பிர்தாவுஸ் வான் ஜாகி தெரிவிக்கையில், அந்தப் பெண் டிக் டாக் சமூக வலைத்தளத்தின் மூலம் சந்தேக நபருடன் பழகி, இணையவழியில் காதலித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

விசாரணையில், தான் அமெரிக்காவைச் சேர்ந்த விமானி எனக்கூறிய சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4,47,000 அமெரிக்க டாலர் (US$447,000) ரொக்கம் அடங்கிய பார்சல் ஒன்றை அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, கூரியர் நிறுவனத்தின் மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் அப்பெண்ணைத் தொடர்புகொண்டு, அந்தப் பரிசுப் பார்சல் சிங்கப்பூர் – மலேசிய எல்லையில் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அப்பார்சலை விடுவிக்கப் பல கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார்.

இதை உண்மையென நம்பிய அப்பெண், சந்தேக நபர் கொடுத்த பல்வேறு வங்கி எண்களுக்குப் பல தவணைகளாக மொத்தம் RM112,500 பணத்தைச் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அந்த நபர் பெண்ணின் தொலைபேசி எண்ணைத் தடை செய்துவிட்டுத் தலைமறைவானார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து மலேசியக் குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் (மோசடி) கீழ் வழக்குப்பதிவு செய்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments