Offline
Menu
30 வயது கணவர் மீது கோலா திரெங்கானு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
By Administrator
Published on 08/31/2026 16:00
News

தனது மனைவியின் விருப்பத்திற்கு மாறாக அவருக்கு இயற்கை மாறான முறையில் பாலியல் கொடுமை இழைத்ததாக 30 வயதுடைய கணவர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி நஸ்லிஸா முகமட் நஸ்ரி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, பிரதிவாதியான அக்கணவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் வழக்கை எதிர்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி இரவு 11:00 மணியளவிலும், அதே ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 10:00 மணியளவிலும் மாராங் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் தனது மனைவிக்கு எதிராக இக்குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 377C-இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

இரு குற்றச்சாட்டுகளுக்காகவும் சந்தேக நபரான கணவருக்கு RM15,000 பிணைத் தொகையும் ஒரு நபர் ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மனைவியை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது மற்றும் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் ஆகிய கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments