Offline
Menu
காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது உணவக ஊழியர் பலி!
By Administrator
Published on 08/31/2026 17:00
News

சுங்கை ரெங்கிட் – கோத்தா திங்கி சாலையின் 35-வது கிலோமீட்டரில் இன்று காலை காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், உணவக ஊழியரான 18 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் ஷாபிக் நஷிக் சுராடி என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கோத்தா திங்கி மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி சுப்ரண்டண்ட் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.

இன்று காலை 9.10 மணியளவில் இச்சம்பவம் குறித்து போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. 76 வயது முதியவர் ஓட்டி வந்த ‘பெரோடுவா அருஸ்’ கார், பண்டார் மாஸ் திருப்பச் சந்திப்பில் இருந்து வெளியேற முயன்றபோது, பண்டார் பெனாவார் நோக்கி நேராகச் சென்று கொண்டிருந்த ‘யமஹா 135LC’ மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற 14 வயது சிறுவனுக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சுல்தானா இஸ்மாயில் மருத்துவமனைக்குச் (HSI) கொண்டு செல்லப்பட்டார்.

76 வயது கார் ஓட்டுநர்: காரை ஓட்டி வந்த முதியவருக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோத்தா திங்கி மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments