சட்டவிரோத தொழிலாளர்களைப் பணிக்கமர்த்திய 20 முதலாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு: 6 லட்சம் ரிங்கிட் அபராதம்!
திரெங்கானு மாநிலத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலத்தில் நடத்தப்பட்ட 334 தீவிரச் சோதனைகளில், மொத்தம் 4,884 வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்டு, அவர்களில் 1,257 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 522 பேர் முறையான பயண ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் ஏதுமின்றி தங்கியிருந்ததால், குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று, திரெங்கானு மாநில இமிக்கிரேஷன் துறை (JIM) இயக்குநர் முகமட் யுஸ்ரி முகமட் நோர் கூறினார்.
அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாகத் தங்கியிருந்ததற்காக பிரிவு 15(4)-இன் கீழ் 317 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அனுமதிப் பத்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக விதிமுறை 39(b)-இன் கீழ் 372 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் வேறு குற்றங்களுக்கு 46 பேர் பிற குடிநுழைவு மீறல்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
கட்டுமான இடங்கள், வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தும் வீடுகள், வணிக வளாகங்கள், தோட்டம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் போன்ற ஆபத்து நிறைந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு தேசியப் பாதுகாப்பு துறை, உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மலேசியக் காவல் துறை (PDRM) ஆகியவற்றுடன் இணைந்து இச்சோதனைகள் நடத்தப்பட்டன.
இக்கால கட்டத்தில் குடிநுழைவுத் துறை மொத்தம் 207 விசாரணை அறிக்கைகளைத் திறந்து, RM2.887 மில்லியன் தொகையைக் கூட்டு அபராதமாகப் (Compound) பெற்றுள்ளது.
மேலும், 707 சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பணியமர்த்திய 20 முதலாளிகள் உட்பட மொத்தம் 727 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, RM602,000 அபராதம் விதிக்கப்பட்டது.