Offline
Menu
கோத்தா பாருவில் 4 மாடி நீர் தொட்டி கட்டடத்தில் ஏறி பெண் தற்கொலை முயற்சி
By Administrator
Published on 09/01/2026 15:00
News

30 நிமிடங்கள் போராடித் தீயணைப்புப் படை மீட்பு!

இங்குள்ள தாமான் அல் முத்தாகின் மூக்கிம் லுண்டாங் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு மண்டலப் பெண்கள் காப்பகத்தின் 4 மாடிகள் கொண்ட நீர் தொட்டிக் கட்டடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற 52 வயது இந்தோனேசியப் பெண்ணைத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) அதிகாரிகள் 30 நிமிடங்கள் போராடிப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.40 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்ததாக கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுக் கமாண்டர் சே மஸ்லான் சே முகமட் கூறுகையில், முதலில் கட்டடத்தின் கீழிருந்து அப்பெண்ணை இறங்கி வருமாறு சமாதானப்படுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை என்றார்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் நேரடியாகச் சுழல் ஏணி வழியாக 4-வது மாடி நீர் தொட்டி கட்டடத்தின் மீது ஏறி அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடுமையான மன உளைச்சலில் இருந்த அப்பெண், தான் வேலை செய்த முதலாளியிடமிருந்து தப்பித்து வந்து கடந்த 7 மாதங்களாக இந்த காப்பகத்தில் தங்கியிருந்துள்ளார்.

அவருக்கு வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருந்துள்ளதாகவும், அதனை யாரும் பொருட்படுத்திச் சிகிச்சை அளிக்காததால் ஏற்பட்ட வேதனையிலேயே இந்த முடிவை எடுக்கத் துணிந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

சுமார் 30 நிமிட அமைதியான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அப்பெண் சமாதானமடைந்து பாதுகாப்பாகக் கீழே அழைத்து வரப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக அவர் ராஜா பெரம்புவான் சைனாப் II மருத்துவமனைக்கு (Hospital Raja Perempuan Zainab II) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அப்பெண் சொந்த நாட்டிற்குத் திரும்பி அனுப்பப்படுவது தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments