Offline
Menu
முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி
By Administrator
Published on 09/05/2026 13:00
News

சென்னை, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, விளையாட்டு சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தப் புதிய “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” உருவாக்கப்படும்.

பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3, மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.

குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்.

“One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports.”. முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments