Offline
Menu
பாலிங் மலையேற்றத்தில் அசம்பாவிதம்
By Administrator
Published on 09/07/2026 14:00
News

இங்குள்ள ‘லாத்தா தெபூ’ (Lata Debu) மலைப் பகுதிக்குச் சென்ற மலையேற்றக் குழுவில், பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையிலும், மேலும் இருவர் வழியறியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொண்ட நிலையிலும் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 11.28 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாரியத்திற்கு கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற இம்மலைப் பகுதிக்குச் சென்ற 18 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

“முதலில் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்த 29 வயது பெண் மலையேற்றப் பயணியை மீட்டு, தீயணைப்பு வீரர்கள் அவரை மலையிலிருந்து பாதுகாப்பாகக் கீழே கொண்டு வந்தனர் என்று, பாலி தீயணைப்பு நிலைய அதிகாரி சுல்கைரி மாட் தஞ்சில் கூறினார்.

காட்டுக்குள் வழியறியாமல் தவித்த 20 வயதுடைய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணியைத் தேடும் பணி தொடரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் தங்களின் இருப்பிடத்தை (Location) மீட்புக் குழுவினருக்குத் தொலைபேசி வாயிலாக அனுப்பி வைத்தனர்.”

இதனைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் மலையேறிச் சென்று, சிக்கித் தவித்த இருவரையும் மீட்டுப் பத்திரமாகக் கீழே அழைத்து வந்தனர்.

Comments