Offline
Menu
கிளானா ஜெயாவில் பள்ளிச் சீருடையுடன் காணாமல் போன 16 வயது மங்கள காளி
By Administrator
Published on 09/13/2026 16:00
News

சிலாங்கூர், கிளானா ஜெயாவில் உள்ள தனது வீட்டில் இருந்த 16 வயது மலேசிய தமிழ் சிறுமி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியைக் கண்டுபிடிக்கப் காவல்துறையினர் பொதுமக்களின் அவசர உதவியை நாடியுள்ளனர்.

 

நேற்றிரவு 8.28 மணியளவில் சிறுமி காணாமல் போனது குறித்து அதிகாரப்பூர்வப் புகார் கிடைக்கப்பெற்றதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாம்சுடின் மாமத் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

 

காணாமல் போன சிறுமி மங்கள காளி விக்னேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நேற்று (செப்டம்பர் 11) அதிகாலை 5.45 மணியளவில் கிளானா ஜெயா, ஜாலான் SS 5B/1 முகவரியில் உள்ள தனது வீட்டில் கடைசியாகப் பார்க்கப்பட்டுள்ளார்.

 

சிறுமி சுமார் 157 சென்டிமீட்டர் உயரமும், மெலிந்த உடல்வாகும், மாநிறம் (Sawo Matang) கொண்டவர் என்றும், மார்பளவு நீளமுள்ள நேரான தலைமுடி உடையவர் என்றும், கடைசியாகப் பார்க்கப்பட்டபோது மேல்நிலைப் பள்ளிச் சீருடையான ‘பினாஃபோர்’ (Pinafore) அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

 

இச்சிறுமி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் தலைமையகத்தின் செயற்பாட்டு அறையை 03-7966 2222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும், இவ்வழக்கின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது ஷெரீபுதீனை 019-386 1396 என்ற எண்ணிலும் நேரடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Comments