Offline
Menu
முன்னாள் அமைச்சர் ஜமீல் கிர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது!
By Administrator
Published on 09/15/2026 16:00
News

பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சரான டத்தோஸ்ரீ ஜமீல் கிர் பஹாரோம், லம்பாகா தாபோங் ஹாஜி நிறுவனத்திற்குச் சொந்தமான RM860.3 மில்லியனுக்கும் அதிகமான சொத்துகளை முறையற்ற முறையில் கைமாற்றியதாகத் தொடரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளச் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

 

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லி அகமத் முன்னிலையில் வாசிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளை 65 வயதான ஜமீல் கிர் முற்றிலும் மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.

 

குற்றப்பத்திரிகையின்படி, புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையின் (சமய விவகாரங்கள்) அலுவலகத்தில் வைத்து 2015 முதல் 2017 வரை ‘அல்-ரவ்தா ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் அண்ட் புராஜெக்ட்ஸ் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்திற்குத் தாபோங் ஹாஜியின் சொத்துகளை நேர்மையற்ற முறையில் கைமாற்றினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது:

 

இதில் RM42.94 மில்லியன் (SAR44.17 மில்லியன்) — 3 ஏப்ரல் 2015, RM288.17 மில்லியன் (SAR250.04 மில்லியன்) — 14 டிசம்பர் 2016 மற்றும் RM529.19 மில்லியன் (SAR471.85 மில்லியன்) — 17 ஆகஸ்ட் 2017 என கட்டம் கட்டமாக சொத்துக்கள் கைமாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

இக்குற்றச்சாட்டுகள் குற்றவியல் சட்டத்தின் (Penal Code) பிரிவு 403-இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

“வழக்கின் மொத்தத் தொகை RM860 மில்லியனுக்கும் அதிகம் என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு RM1 மில்லியன் ஜாமீன் தொகை மற்றும் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஃபாரா எஸ்லின் கோரினார்.”

 

இருப்பினும், ஜமீல் கிர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் டத்தோ ஹிஷாம் தே போ தேய்க், தனது கட்சிக்காரரின் ஒரே வருமானம் அமைச்சருக்கான மற்றும் இராணுவப் ஓய்வூதியம் மட்டுமே எனக் கூறி ஜாமீன் தொகையைக் குறைக்குமாறு வாதிட்டார்.

 

வாதங்களைக் கேட்ட நீதிபதி ரோஸ்லி அகமத், RM300,000 ஜாமீன் தொகையை நிர்ணயித்ததோடு, அவரது கடபிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments