Offline
Menu
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 13 பேர் படுகாயம்
By Administrator
Published on 09/17/2026 15:00
News

ஏமன் உள்நாட்டுப்போர்

அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

 

ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

 

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

 

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதியும் தாக்குதல் நடத்தியது. மேலும், ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.

 

உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏமன் அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். குறிப்பாக, ஏமனின் பப் அல் மண்டப் ஜலசந்தி பகுதியை ஹவுதி கைப்பற்றியுள்ளது. இந்த ஜலசந்தி பகுதி அரபிக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாகும். இந்த ஜலசந்தி வழியாகவே ஆசியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு கப்பல் போக்குவரத்து உள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய், சரக்கு கப்பல்கள் இவ்வழியாகவே வர்த்தகத்தை அதிகம் செய்து வருகின்றன. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

 

சவுதி மீது ஹவுதி தாக்குதல்

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியாவின் அப்ஹா, கமிஸ் முஷித், தைப் ஆகிய நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

13 பேர் படுகாயம்

பொதுமக்கள் குடியிருப்புகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கர் என பல்வேறு உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.

 

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Comments