ஜோகூர் பாருவில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் நேற்று வரை ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையின் போது, முறையான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 53 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாலை விதிகளை மீறும் வெளிநாட்டு ஓட்டுநர்களைக் குறிவைத்து இந்த ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்பட்டதாக மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்துள்ளார்.
இந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, பல்வேறு சாலைப் போக்குவரத்து விதிகளின் கீழ் மொத்தம் 103 சம்மன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
“முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 53 வழக்குகளும், சாலை வரி தொடர்பான மீறல்களுக்கு 44 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.” என்று அசிஸ்டென்ட் கமிஷனர் ராடின் கூறினார்.
பொதுமக்களின் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, 47 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள், ஒரு லாரி மற்றும் ஒரு எம்பிவி (MPV) வாகனம் உட்பட மொத்தம் 53 வாகனங்கள் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 64(1)-இன் கீழ் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக ஆவணங்களின்றி வாகனம் ஓட்டும் வெளிநாட்டினருக்கு எதிராக இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.