பேராக், சிம்பாங் பூலாய், கம்போங் கெபாயாங்கில் உள்ள கெராமாட் பூலாய் குவாரிப் பகுதியில், கடந்த திங்கட்கிழமை லோரி மீது ராட்சதப் பாறை விழுந்த விபத்தில் லோரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தக் குவாரி இயங்குவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநில மனித வளங்கள், சுகாதாரம், இந்திய சமுதாய விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோ ஏ. சிவநேசன் இதனை உறுதிப்படுத்தினார். மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து பேராக் மாநிலச் ‘சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்புத் துறை’ (JKKP) தடை மற்றும் மேம்பாட்டுக்கான உத்தரவு நோட்டீஸைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட குவாரிப் பகுதியின் நிலைமையை மதிப்பீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க, JKKP தரப்பிலிருந்து பொறியியலாளர் ஒருவரின் அறிக்கை பெறப்படும் வரை இந்தத் தற்காலிக மூடப்பட்டிருக்கும் உத்தரவு அமலில் இருக்கும்.” என்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டத்தோ ஏ. சிவநேசன் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவாரி வளாகத்திற்குள் நுழைய லோரியுடன் காத்திருந்த ஓட்டுநர் மீது, மலையிலிருந்து திடீரென உருண்டு வந்த பெரிய பாறைத் துண்டு லோரியின் முன்பக்கம் மீது பலமாக விழுந்துள்ளது. லோரி கேபினுக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் மீட்கப்பட்ட போதிலும், அவர் மாலை 5.50 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டார்.
சம்பவத்திற்குச் சரியாக மூன்று மணி நேரத்திற்கு முன்பு, அதாவது மதியம் 1 மணிக்குக் குவாரிப் பகுதியில் பாறைகளை உடைக்கும் வெடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், அந்த நேரத்தில் எவ்விதப் பாறை நகர்வும் கண்டறியப்படவில்லை என்றும், மூன்று மணி நேரத்திற்குப் பின்னரே எதிர்பாராதவிதமாகப் பாறை சரிந்து விழுந்துள்ளது என்றும் சிவநேசன் விளக்கமளித்தார்.
1994-ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் (OSHA) பிரிவு 17 மற்றும் 18-இன் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்ட விதமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.