Offline
Menu
நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு அளிக்கப்பட்ட பின்னரும்
By Administrator
Published on 09/20/2026 16:00
News

காஜாங்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 1MDB வழக்கின் நிலை, அவருக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு அளிக்கப்பட்ட பின்னரும் மாறாமல் தொடர்கிறது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  தலைவர் அப்துல் ஹலீம் அமான் தெரிவித்தார். ஒவ்வொரு வழக்கிலும் உள்ள விவகாரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அவை தனித்தனியாகக் கையாளப்பட வேண்டும் என்று ஹலீம் கூறினார்.

 

முன்னாள் பிரதமருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு, தற்போது நடைபெற்று வரும் 1எம்பிடி வழக்கு மற்றும் மேல்முறையீடு ஆகியவற்றில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ”எங்களைப் பொறுத்தவரை, நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்கம் போல் தொடரும். 

 

தற்போதைய நிலை மாறாமல் நீடிக்கிறது,” என்று அவர் கூறினார். ஒவ்வொரு விசாரணையிலும் வெவ்வேறு குற்றச்சாட்டுகளும் விவகாரங்களும் அடங்கியிருப்பதால், ஒரு வழக்கை மற்றொரு வழக்கோடு எளிதாக ஒப்பிட முடியாது என்று ஹலீம் குறிப்பிட்டார்.

 

ஒவ்வொரு வழக்கும் தனித்துவமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை ஒரே மாதிரியான வழக்குகளாகக் கையாள முடியாது. ஒவ்வொரு விசாரணையும், விசாரிக்கப்படும் விஷயம், எழுப்பப்பட்ட குறிப்பிட்ட விவகாரங்கள் அல்லது பெறப்பட்ட புகார்கள் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

 

நேற்று முன்தினம் சுல்தான் இப்ராஹிம், நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளித்தார். இதன்படி, 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் மீதமுள்ள காலத்தை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக்காவலில் இருந்து அவர் கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற கூட்டாட்சிப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் 64ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments