Offline
Menu
கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் மீட்க முடியாமல் தவித்த பொதுமக்கள்!
By Administrator
Published on 09/22/2026 15:00
News
பகாங் பெந்தோங்கில் தொடர்மழை

பகாங், பெந்தோங் பகுதியிலுள்ள கம்போங் செரிங்கின் தெங்கா, ஜாண்டா பைக் பகுதியில் நேற்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், வெறும் 10 நிமிடங்களுக்குள் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இச்சம்பவம் குறித்து 51 வயதான மாஸ்ரிசால் சலேஹுடின் கூறுகையில், பிற்பகல் 3.30 மணியளவில் லேசாகத் தொடங்கிய மழை, மாலை 5.00 மணியளவில் மிகத் தீவிரமடைந்து வெள்ள நீர் வேகமாக உயரத் தொடங்கியது என்றார்.

 

ஆற்றிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவரது வீட்டிற்குள் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. “மழை வழக்கத்திற்கு மாறாக மிகக் கடுமையாகப் பெய்தது. வெறும் 10 நிமிட இடைவெளியில் நீர் வேகமாக உயர்ந்து விட்டது. நாங்கள் வீட்டில் இருந்த மின்சாரப் பொருட்களை உயரமான இடத்திற்கு மாற்ற முயன்றோம், ஆனால் முழுமையாகக் காப்பாற்ற முடியவில்லை. கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் கூட உயரமான இடத்திற்கு மாற்ற நேரம் கிடைக்கவில்லை.” என்றார் அவர்.

 

வெள்ளத்தின் காரணமாகச் சலவை இயந்திரம் உள்ளிட்ட பல மின்சாரச் சாதனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலத்த சேதமடைந்தன. இப் பகுதியில் இதற்கு முன்பும் வெள்ளம் ஏற்பட்டுள்ள போதிலும், இம்முறை நீர் மிக வேகமாகவும் உயரமாகவும் வந்ததாக அவர் தெரிவித்தார்.

 

இதனிடையே, கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வெள்ள முன்னெச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், தான் உடனடியாக விழிப்படைந்து முக்கியப் பொருட்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முடிந்ததாகக் கமாருல் அஸ்ரா தெரிவித்தார்.

 

மகரிப் நேரத்திற்குப் பிறகு மழை லேசாகக் குறைந்ததைத் தொடர்ந்து வெள்ள நீர் வடியத் தொடங்கிய போதிலும், வீடுகளிலும் வீதிகளிலும் தடிமனான சேறும் சகதியும் எஞ்சியிருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Comments