Offline
Menu
நிபந்தனையற்ற இடைக்காலத் தடை கோரிய ரோஸ்மாவின் மனு நிராகரிப்பு
By Administrator
Published on 09/24/2026 14:00
News

புத்ராஜெயா: லெபனான் நாட்டைச் சேர்ந்த நகை நிறுவனம் ஒன்றுக்கு சுமார் 67.5 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அந்த உத்தரவுக்கு நிபந்தனையற்ற இடைக்காலத் தடை கோரிய அவரது மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி ஃபிரூஸ் ஜஃப்ரில் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா, அடுத்த ஆண்டு மார்ச் 25 அன்று விசாரணைக்கு வரவுள்ள மேல்முறையீடு முடியும் வரை நிபந்தனையற்ற இடைக்காலத் தடையைப் பெறுவதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்கவில்லை என்று கூறியது.

நீதிபதிகள் அமர்ஜீத் சிங் மற்றும் அலிசா சுலைமான் ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த அமர்வு, ரோஸ்மா நீதிமன்றச் செலவுத் தொகையாக 30,000 ரிங்கிட் செலுத்தவும் உத்தரவிட்டது. டத்தோ டேவிட், உயர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த நீங்கள் விரும்பியதைச் செய்யலாம்,” என்று ‘குளோபல் ராயல்டி டிரேடிங் எஸ்.ஏ.எல்’ நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் குருபாதமிடம் நீதிபதி ஃபிரூஸ் கூறினார்.

ஜூன் 10 அன்று, உயர் நீதிமன்ற நீதிபதி குவே சூ சூன் ரோஸ்மாவுக்குக் கடனாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 43 நகைகளுக்காக 67.5 மில்லியன் ரிங்கிட்டை ஒரு மாதத்திற்குள் செலுத்த உத்தரவிட்டு, ‘குளோபல் ராயல்டி’ நிறுவனம் ரோஸ்மாவுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை அனுமதித்தார். இந்த வழக்கு, 2018இல் ‘குளோபல் ராயல்டி’ நிறுவனம் ரோஸ்மாவிடம் பார்வைக்காக  வழங்கியதாகக் கூறப்படும் 14.57 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 67.5 மில்லியன் ரிங்கிட் ) மதிப்புள்ள 43 ஆடம்பர நகைகள் தொடர்பானதாகும்.

அந்த நகைகள் தங்கள் நிறுவனத்தின் சொத்து என்றும், அவை ஒருபோதும் திருப்பித் தரப்படவில்லை என்றும் கூறிய அந்நிறுவனம், ரோஸ்மாவிடமிருந்து இழப்பீடு கோரியது. லெபனானை தளமாகக் கொண்ட ‘குளோபல் ராயல்டி’ நிறுவனம், காவல்துறைத் தலைவர் மற்றும் அரசாங்கத்தையும் இவ்வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தது.

ஆகஸ்ட் 12 அன்று, நீதித்துறை ஆணையர் மரியான் அன்டோனெட் கானி   ரோஸ்மாவுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையை வழங்கினார். அதன்படி, தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட முழுத் தொகையான சுமார் 67.5 மில்லியன்  ரிங்கிட், இரு தரப்பு வழக்கறிஞர்களின் கூட்டு வங்கிக் கணக்கில் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ரோஸ்மாவின் மேல்முறையீடு தோல்வியுற்றால் ‘குளோபல் ராயல்டி’ நிறுவனத்தின் பணத்திற்கான உரிமையைப் பாதுகாக்கவும், அதே வேளையில் அப்பணம் மலேசியாவிலேயே இருப்பதை உறுதிசெய்து, அவர் வெற்றி பெற்றால் அதை அவரிடமே திருப்பி அளிக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என்று அவர் கூறினார். அதன்பிறகு, ரோஸ்மா நிபந்தனையற்ற இடைக்காலத் தடை கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினார்.

அவரது வழக்கறிஞர் ரெசா அப்துல் ரஹீம் இன்று வாதிடுகையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அத்தகைய தடையை வழங்குவதற்கான அதிகாரம் இருப்பதாகவும், குறிப்பாக மேல்முறையீட்டு விசாரணைக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்களே உள்ள நிலையில் இது அவசியமென்றும் குறிப்பிட்டார். ஆர்.  வினோதானியின் உதவியுடன் வாதாடிய குருபாதம் இந்த மனுவை எதிர்த்தார். 1எம்பிடி நிறுவனம் ரோஸ்மா மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதால், ‘குளோபல் ராயல்டி’ நிறுவனம் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கிடைக்க வேண்டிய பலனைப் பெற முடியாமல் போகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

Comments